கரூர் அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊராட்சி மன்ற தலைவருடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




 


கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட அணை உள்ளது. அந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன. 


 




 


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அப்படியே அமராவதி ஆற்றில் விடுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரி அணையில் இருந்து வெளியேறும் இந்த கழிவு நீரானது கரூர், செட்டிபாளையம் கதவணைப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நுரை பொங்க காட்சியளிப்பதோடு, மாசுபட்ட தண்ணீர் நிறம் மாறி இருப்பதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்களை  கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் மனு வழங்கினார்.


 





 


தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதற்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சேகர் மற்றும் ஊர் பொதுமக்களுடன் புகார் மனுவை வழங்கினார். கழிவுநீர் கலந்த தண்ணீரை பயன்படுத்தியதால் அப்பகுதி பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. குடிநீர் குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது ஊர் பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.