எதையும் எதிர்பார்க்காமல் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர் செங்கோட்டையன் என ஓபிஎஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “உதயக்குமாருக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் மொழியெல்லாம் எப்படி என்று உங்களுக்கே தெரியும். அவருக்கு ஏன் நான் பதில் சொல்ல வேண்டும். கொங்கு மக்கள் எல்லாம் தங்கங்கள். அண்ணன் செங்கோட்டையன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி எழுப்பிய காலத்தில் இருந்து இன்றுவரை கழகத்திற்காக குரல் கொடுத்து கொண்டிருப்பவர். கட்சிக்காக நீண்ட காலமாக அவரும் நானும் பணியாற்றியிருக்கிறோம். அந்த வகையில் எதையும் எதிர்பாராமல் கட்சிக்கு உழைக்கும் தொண்டனாகத்தான் இன்றும் இருக்கிறார்.
கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாச தொண்டர்கள் கட்சி இணைய வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். கட்சி இணைந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என மக்கள் நினைக்கிறார்கள்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டதற்கு காரணம் மக்கள் எங்கள் பக்கம் நிரூபிக்கத்தான். ஆனால் என்னை தோற்கடிக்க என்ன சூழலை உண்டாக்கினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். பதிவான வாக்குகளில் 33 சதவீதம் எங்களுக்கு கிடைத்தது. இதன்மூலம் மக்கள் எங்கள் பக்கம்தான் என்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அளவுகோலை வைத்து பாஜக அரசு நிதி ஒதுக்கி வருகிறது. தமிழகத்திற்கு வருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தமிழகத்தில் இருமொழிக்கொள்கைதான் பின்பற்றப்படும் என தெளிவாக உள்ளோம்.
என்னுடைய கருத்துக்கள் ஆலோசனைகளாக இருக்கும். இபிஎஸ் கருத்துக்கள் வன்மையாக இருக்கும். கட்சி இணைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும்போது அமித்ஷா என்னையையும் இபிஎஸையும் அழைத்து பேசினார். இணைய வேண்டும் என கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. அதன் பலனை இப்போது அனுபவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
அப்போது செங்கோட்டையனிடம் பல்வேறு சூழல்களில் பயணித்துள்ளீர்கள். அவரிடம் பேசுனீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “கட்சி இணைய வேண்டும் என நினைப்பவர்களிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அப்போது செங்கோட்டையனிடம் பேசினீர்களா என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “கண்டிப்பாக சொல்லனுமா? எதையாவது சொல்லி சண்டைய இழுத்துவிட்டுடாதீங்க. அவர் மேல் நடவடிக்கை எடுக்கணும். இதனால் பல பிரச்சினைகள் வரணும். எந்த சேனல் நீங்க. ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார். இதனால் அங்கு சிரிப்பலை உண்டாகியது.