தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (04.11.2024) கொளத்தூர் ஜெகநாதன் தெருவில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் 'Co-working Space’ மற்றும் மாணவர்களுக்கான ‘கல்வி மையம்’ என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ”முதல்வர் படைப்பகம்” ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ’’திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் வருபவர்கள் எல்லாம், புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்று நினைக்கின்றனர்.
வாழ்க வசவாளர்கள்
அவர்களுக்கு எல்லாம் ஒன்றை பணிவோடு சொல்ல விரும்புகின்றேன். மூன்றரை ஆண்டு முடிந்து, நான்கு ஆண்டை எட்டும் காலத்தில், இந்த ஆட்சி செய்துள்ள சாதனைகளை எண்ணிப் பாருங்கள். ஒரே வரியில் அண்ணா சொல்வார். வாழ்க வசவாளர்கள்.
அவர்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எங்கள் பணி மக்களுக்கானது. தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுகவை விமர்சித்த தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கிய நிலையில், அக்கட்சியின் முதல் மாநாடு, விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய், திமுகவையும் அக்கட்சி முன்னெடுத்து வரும் திராவிட மாடலையும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.