வீரபாண்டிய கட்டபொம்மன் விவகாரத்தில், அவரை காட்டிக் கொடுத்தது எட்டப்ப மகாராஜா என்பது தவறான தகவல் என்றும், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி, அதை எதிர்த்து, எட்டயபுரம் சமஸ்தானத்தின் பட்டத்து அரசர் சந்திர சைதன்யா தலைமையில் எட்டயபுரம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement


எட்டயபுரம் பட்டத்து அரசர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம்


வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்ப மகாராஜா என்ற தவறான தகவலை எதிர்த்து, எட்டயபுரத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42-வது பட்டத்து அரசர் சந்திர சைதன்யா இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். எட்டயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


“ஒரு திரைப்படத்தால் மக்களிடம் தவறான அர்த்தம் ஏற்பட்டுவிட்டது“


இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய பட்டத்து அரசர் சந்திர சைதன்யா, வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது எட்டப்ப மகாராஜா என்ற தகவல் வரலாற்றில் எங்குமே இல்லை என தெரிவித்தார். மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தில் வெளியான ஒரு தவறான தகவலை வைத்துக் கொண்டு, பொதுமக்கள் மத்தியில் "எட்டப்பன்" என்றால் "துரோகம்" என்ற தவறான அர்த்தம் ஏற்பட்டு விட்டதாக வேதனை தெரிவித்தார்.


“எட்டயபுரம் மக்களின் மனதை புண்படுத்துகிறது“


தொடர்ந்து பேசிய சந்திர சைதன்யா, இந்த தவறான தகவல் எட்டயபுரம் சமஸ்தானத்தை மட்டுமின்றி, எட்டயபுரம் மக்களின் மனதையும் புண்படுத்துவதாக தெரிவித்தார். இனியும் இதனை அனுமதிக்க முடியாது என்றும், அதனால் தான் மக்களை திரட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




“முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை தொடங்கியது எட்டயபுர சமஸ்தானம்“


மேலும், தமிழகத்திலேயே முதன் முதலில் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தது எட்டயபுர சமஸ்தானம் தான் என்று பெருமிதம் தெரிவித்த சந்திர சைதன்யா, அதேபோல பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது, ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திக் காட்டியது என பல்வேறு சமூகநீதி விஷயங்களில் முன்னோடியாக திகழ்ந்தது எட்டயபுரம் சமஸ்தானம் என்று குறிப்பிட்டார். ஆனால், இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சமஸ்தானம், ஒரு திரைப்படத்தின் மூலம் பரவிய தவறான தகவலால், மக்கள் மனதில் துரோகத்தின் சின்னமாக பதிவு செய்யப்படுவதை இனியும் ஏற்க முடியாது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.