தமிழ்நாட்டில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகரிக்கப்பட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (SPECIAL TNTET - 2) (தாள்-I மற்றும் - II) நடத்துவதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://trb.tn.gov.in) 26.10.2026 அன்று வெளியிடப்பட்டது.
சிறப்பு டெட் தேர்வு
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் 01.09.2025-க்கு முன்னர் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து பணிபுரிந்து வர வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்விற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 27.10.2026 முதல் 19.11.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, இத்தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்து. தேர்வு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் அதற்கான கால அவகாசம் 20.11.2026 முதல் 22.11.2026 வரை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, விண்ணப்பத்தில் திருத்தங்கள் (Edit Option) மேற்கொள்ளும்போது கீழ்க்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.
திருத்தம் செய்யும் போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய விதிமுறைகள்!
1. இணையவழி விண்ணப்பத்தை முழுமையாக சமர்ப்பித்து (Final Submit), உரிய தேர்வுக்கட்டணத்தை செலுத்திய விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
2. விண்ணப்பதாரர்கள் விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை உள்ள “சமர்ப்பி” (Submit) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்த பின்பு, இறுதியாக உள்ள “சமர்ப்பி” (Final Submit) பொத்தானை அழுத்தி உறுதி செய்யவேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
3. திருத்தம் (Edit Option) மேற்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், திருத்தம் மேற்கொள்ளும் குறிப்பிட்ட இடத்தில் (Panel) உரிய திருத்தம் மேற்கொண்ட பின்பு, தொடர்ச்சியாக அடுத்த பகுதிகளையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் சில பகுதிகளில் (Fields) திருத்தம் செய்யும்பொழுது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும்.
4. திருத்தம் (Edit Option) செய்த பின்னர் Print Preview Page-க்கு சென்று அனைத்தும் சரியாக உள்ளபட்சத்தில் Declaration-ல் ஒப்புதல் அளித்த பின்னரே விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
5. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய விவரங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
6. விண்ணப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் (Mobile No.), மின்னஞ்சல் முகவரி (E-mail ID) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
7. சாதி (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் ஏற்படும் மாற்றங்களில் விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.
8. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பின் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர், தேர்வுக்கான முழு கட்டணத்தொகையினை மீண்டும் செலுத்த வேண்டும்.
9. விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின், விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதிதொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
10. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் பதிவு செய்து சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுகூட நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். மேலும் 22.11.2026-க்கு மேல் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
