ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது.  ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த், தேமுதிக  கழக அவைத்தலைவர் இளங்கோவன், கழக துணை செயலாளர் பார்த்தசாரதி, கழக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், உள்ளிட்ட  தலைமை கழக நிர்வாகிகளுடன் கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த், ஆளும் கட்சி மற்றும் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி இருப்பதால், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேமுதிக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.