ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ஓபிஎஸ், “ பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்" என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் அந்த தொகுதியின் முன்னால் எம்.எல்.ஏ.,வான தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.