ஈரோடு கிழக்கு தொகுதியில் தங்களது வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் அவரது ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவித்தார். 


இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கையில், “இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுகிறார். தென்னரசுக்காக இல்லை, இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம், வாக்கு சேகரிப்போம். இரட்டை இலை முடக்கப்படக்கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு, அதன் வெற்றிக்காக பாடுபடுவோம்." என தெரிவித்தார். 


ஈரோடு கிழக்கு தொகுதி பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். தற்போது, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் விலகியதால் பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுவது உறுதியானது. 


இரட்டை இலை: 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஓபிஎஸ் அணி தரப்பில் செந்தில் முருகனும், இபிஎஸ் அணி தரப்பில் தென்னரசும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 


இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி  நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு மீது பதில் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது. மேலும் இடைக்கால மனுவில் தீர்ப்பு வழங்கினால் அது பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


அதேசமயம் கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தது. 


இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகள் அனைத்து நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதனால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை எனவும், அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. 


எனவே உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்கிறோம் என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், அதனைப் பொறுத்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து திங்கட்கிழமை தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதேசமயம் கட்சியின் சின்னம் குறித்து இதுவரை எந்த பிரச்சனையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.


மேலும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒரு தரப்பை அங்கீகரிக்க முடியாது எனவும்  கூறியது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, கட்சியின் நலனை கருதியும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காகவும் நிபந்தனையை ஏற்பதாக ஓபிஎஸ் தரப்பில் அன்றைய தினம் சொல்லப்பட்டது. 


இந்தசூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை வாபஸ் பெறுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கப்பட்டது.