ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 


சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 






அதேசமயம் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால் கூட்டணி நலன், எதிர்கால மக்கள் நலன் கருதி அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவித்து விட்டது.  ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை விரைவில் அறிவிக்க உள்ளார். 


அதேசமயம் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறும் ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு, தங்கள் அணியில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து  முக்கிய விஜபி-களையும், சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் முன்னாள் அமைச்சரும்,ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் செயல்படும் தேர்தல் பணிக்குழுவில் 52  முன்னாள் அமைச்சர்கள்  இடம் பெற்றுள்ளனர்.  


அந்த பட்டியலில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தம்பித்துரை, தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை,தளவாய் சுந்தரம்,  வளர்மதி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், காமராஜ், ஓ.எஸ்.மணியன், கோகுல இந்திரா, கரூர் சின்னசாமி, விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


இதேபோல் பெஞ்சமின், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, உடுமலை ராதாகிருஷ்ணன், சேவூர் ராமச்சந்திரன், வைகைச்செல்வன், ஏ.கே.செல்வராஜ், மோகன், என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன், சி.த.செல்லப்பாண்டியன், தாமோதரன், இசக்கி சுப்பையா, எம்.எஸ்.எம். ஆனந்தன், சரோஜா, கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கருப்பணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.பி.சண்முகநாதன், மூர்த்தி, ரமணா, பரஞ்சோதி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.