ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால், வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி காலை 7  மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது.  மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவி பேட் ஆகிய அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டது. அதன் பின் பலத்த போலீஸ் பாதுக்கப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டது.


சீல் வைக்கப்பட்ட அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பத்திரமாக காப்பு அறையில் வைக்கப்பட்டது. காப்பு அறையில் வைக்கப்பட்ட பின் அங்கு பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் பழுதின்றி வேலை செய்வதை உறுதி செய்த அதிகாரிகள் அந்த அறைக்கு சீல் வைத்தனர்.


இதையடுத்து சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. இதனால் துணை ராணுவப்படையினரும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப்படை போலீசார், மாவட்ட போலீசார் என மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால்  மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


இதனையடுத்து, ஜனவரி  31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.


இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்களை சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களம் கண்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.