Erode East By Election : ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடந்த மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேர்தல்


ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது. 


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். அதேபோல் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.  


சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் கட்சியினர் தலைகள் தான் தென்படுகிறது. வீடு வீடாக சென்று  போட்டிப்போட்டுக் கொண்டு  வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர். மேலும் பணம், ஆடைகள், வெள்ளிக் கொலுசு, பரிசுப் பொருட்கள் என ஒருபக்கம் வாக்காளரை கவர அரசியல் கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.


சர்ச்சை


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என பேசியிருந்தார்.  அந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  


அருந்ததியினர் குறித்து அவதூறாக சீமான பேசியதாக எழுந்த புகாரில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


மோதல்


இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் வீரப்பன்சத்திரம் தெப்பளம் அருகே காவிரி ரோடு பகுதியில் சீமான் வந்த வழித்தடத்தில் அவருக்கு முன்பாக கட்சியினரின் வாகனங்கள் வந்தன. அதே இடத்தில் திமுகவை சேர்ந்த தொண்டர்களும் சிலர் இருந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் சிலர் வாகனங்களில் இருந்த இறங்கி, நின்று கொண்டிருந்த திமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


வாக்குவாதம் கைகலப்பாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மோதலில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் தாக்கியதில்  திமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்ததாக கூறப்படுகறிது. மேலும் சாலையில் இருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் கலவரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  


இந்த மோதல் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுகவினருடன் நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஜய், கணேஷ்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.