மயிலாடுதுறையில் பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

மயிலாடுதுறையில் பேருந்து மீது தாக்குதல்:

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடி கிராமத்தில் பள்ளி மினிபஸ் ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக நேற்று மாலை சென்றுள்ளது. அப்போது பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் மூவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியுள்ளனர். கைகளால் கண்ணாடியை அடித்தும், பஸ்சீன் வைபர்களை உடைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் பயந்து போய் அலறினர். சிறிது நேரம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பின்னர் தாங்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

இது சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டு போலீசார் குற்றச்செயலில் ஈடுப்பட்டவர்களை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். 

Continues below advertisement

இபிஎஸ் கண்டனம்:

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

பட்டப்பகலில் குற்றச்செயல்கள்

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது. பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்? யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் "சட்டம்- ஒழுங்கு". குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்? குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.