கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் டெல்லி பயணம், அமலாக்கத் துறையை கண்டு பயமில்லை என்ற உதயநிதியின் பேச்சு உள்ளிட்டவைகள் குறித்து சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பேசியது என்ன.? விரிவாக பார்க்கலாம்.
“3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதது ஏன்.?“
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, பல்வேறு திட்டங்களுக்கும் அனுமதி வழங்கவில்லை என்ற குற்றம்சாட்டை சொல்லி, கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்ததாக விமர்சித்தார்.
3 ஆண்டு கால புறக்கணிப்பிற்குப் பின், நேற்று டெல்லியில் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடை கருத்தை தெரிவித்துள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக ஏன் கலந்துகொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு, கடந்த ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி கிடைத்திருக்கலாம், புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம், பிரச்னைகளை நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவித்திருக்கலாம் என்று கூறினார். மேலும், இதிலிருந்தே, மக்கள் மீது அக்கறை இல்லாத முதலமைச்சர் இவர் என்பது தெரியவருவதாக விமர்சித்தார்.
தற்போது, தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு மட்டத்தில் ஊழல் நடைபெற்று, அமலாக்த்துறையால் ரெய்டு நடைபெற்று, விசாரணையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இதனால், ரெய்டுக்கு பயந்தே ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கருத வேண்டியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர், தற்போது பிரச்னை வந்துவிட்டதால், பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால், 3 ஆண்டுகளாக ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் என்பதே மக்களின் சந்தேகம் என தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது கருப்பு பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும், தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் போது, அதே மோடிக்கு வெள்ளைக் குடை பிடிப்பதாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என, இரண்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக என்பது வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். அதோடு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருப்பதாகவும், மோசமான ஆட்சிக்கு அரக்கோணம் சம்பவமே சாட்சி என்றும் கடுமையாக விமர்சித்தார்.
“ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ வெளிநாட்டிற்கு ஓடியது ஏன்...?“
ரெய்டு குறித்த உதயநிதியின் கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ED-யை கண்டாலும் பயமில்லை, மோடியை கண்டாலும் பயமில்லை என்றால், அவருடைய தம்பி ஏன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார் என கேள்வி எழுப்பினார். அவர் தமிழ்நாட்டில் இருந்திருந்தால், ED-யை கண்டு பயமில்லை என்று சொல்லி இருக்கலாம், ஆனால், உதயநிதியின் தம்பி என்று சொல்லப்படுபவர், தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி நாட்டிற்கு ஓடியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இது தான் ஆரம்ப கட்டம் என்றும், உண்மைகள் வெளிவரும் போது, யார் எப்படி பயப்படுகிறார்கள் என்பது தெரியவரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.