பாஜக மற்றும் அக்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் எந்தகாலமும் தவெக கூட்டணி அமைக்காது என்று விஜய் கூறி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளிப்படையாகவே அழைப்புவிடுத்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தல்:
தமிழ் நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளை இப்போதே அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள திமுக தங்கள் கூட்டணி வலுவாக இருப்பதாகவும் அதே கூட்டணியிலேயே 2026-லும் தொடர்வோம் என்று அறிவித்துள்ளது. மறுபுறம் அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இச்சூழலில் தான் கடந்த ஆண்டு கட்சி ஆரம்பித்த விஜய் தனித்து போட்டியிடப்போகிறாரா இல்லை கூட்டணி அமைத்து போட்டியிடப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவை அழைத்த அதிமுக
இச்சூழலில் தான் அதிமுக கூட்டணியில் தவெக இணையும் என்று கூறப்பட்டது. ஆனால், பாஜக அந்த கூட்டணியில் இருப்பதால் தவெக தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே தான் அதிமுக கூட்டணிக்கு பிரமாண்ட கட்சி ஒன்று வரப்போகிறது என இபிஎஸ் பேசினார். இவ்வளவு நாட்களாக மறைமுகமாக தவெக-வை கூட்டணிக்கு அழைத்து எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே தவெக தலைவர் விஜயை தங்களது கூட்டணிக்கு அழைத்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழான தி இந்துவிற்கு அவர் பேட்டி அளித்திருக்கிறார்.
பேச்சுவார்த்தை இல்லை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன் அதிமுக இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதா? என்ற கேள்விக்கு ‘இதுவரை எந்தவொரு கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் தவெக-வுடன் அதிமுக மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல், உங்கள் கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற ஒத்த எண்ணம் உள்ள கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்’என்றார்.
எடப்பாடி சூசக அழைப்பு:
இது விஜய்க்கு பொருந்துமா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, ‘விஜயும் திமுக ஆட்சிக்கு எதிராகத்தான் போராடுகிறார். எனவே, எல்லா கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது அவருடைய கட்சிக்கும் பொருந்தும்’என்று கூறியுள்ளார்.
இவ்வளவு நாட்களாக தவெகவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்த இபிஎஸ் தற்போது விஜயை வெளிப்படையாகவே கூட்டணிக்கு அழைத்திருப்பது அரசியல் களத்தில் சூட்டை கிளாப்பியுள்ள நிலையில், ”2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையில் தவெக வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும் . மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தலைமையில் வெற்றி பெறுவோம்”என்று தவெக கூறியுள்ளது.