ரயில்வே நுழைவு வாயிலில் இந்தி

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சி சம்பவமாக திருச்சியில் மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்'  என இந்தியில் உள்ள வார்த்தை அப்படியே ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து திமுக சார்பாக திருச்சி மண்டல அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கருப்பு மை பூசி இந்தி வார்த்தை அழிக்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Continues below advertisement

இந்தியில் எழுத்து- இபிஎஸ் எதிர்ப்பு

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்த்தவ்ய துவார்" என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் பெயர்கள் குறிப்பிடப்படும் நிலையில், இந்த வாயிலின் பெயரில் உள்ள தமிழ்க் குறிப்பு உரிய மொழிபெயர்ப்பு இல்லாமல், இந்திக்கான சொல்லாகவே பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எதிர்க்குரல்களுக்கு மதிப்பு அளித்து, தற்போது இந்திப் பெயரை அகற்றிட ரயில்வே அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றை தமிழக மக்கள் நன்கறிவார்கள். உலக நாடுகளுக்கு செல்லும் போது கூட உலகின் தொன்மைமிகு மொழியாம் நம் தமிழின் சிறப்புகளை பெருமிதத்தோடு குறிப்பிடும் நமது பிரதமர் அவர்கள், சமீபத்தில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் "திருவள்ளுவர் இருக்கை" அமைக்க மலேசிய அரசோடு ஒப்பந்தம் கையெழுதிட்டதும் நினைவுகூரத்தக்கது.

Continues below advertisement

தமிழில் பெயர் சூட்ட வேண்டும்

இப்படி தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, மேற்கூறிய நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர்சூட்டிட வேண்டும் என வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.