எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கழிவால்  பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய்க் கழிவால் பாதித்த 22 மீனவ கிராமங்களில் 2,300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 700 படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.  சென்னை மாநகராட்சி மண்டலம் ஒன்று  கண்காணிப்பு சிறப்பு  அலுவலர் கந்தசாமி  பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் எட்டப்பட்ட முடிவை அடுத்து, எண்ணெய்க் கழிவை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாழங்குப்பம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.  சி.பி.சி.எல்.  பெட்ரோலிய ஆலையிலிருந்து வெளியேறிய எண்ணெய்யால்  எண்ணூர் கடல், கொசஸ்தலை ஆற்றில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு எண்ணெய் பரவி சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


எண்ணூரில் பிரச்னை என்ன?


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த நிலையில்,   சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது. அப்பகுதியில் இருக்கும் மீன்வர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக மீன்கள் இனப்பெருக்கத்திற்கான முக்கிய ஆதாரமாக உள்ள கொசஸ்தலை ஆற்று பகுதியில்,  எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர். தங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். கழிவை உடனடியாக அகற்றுவதோடு, எண்ணெய்க் கழிவு கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் வேண்டும் எனவும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை கையாளவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகார்யான கந்தசாமி சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தான், நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


வழக்கு விவரம்:


எண்ணெய்க் கசிவு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பசுமை தீர்ப்பாயம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை சரமாரியாக கேள்வி எழுப்பியது. குறிப்பாக, ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  TRACES OF OIL என்கிறது, ஆனால் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. 5 கிமீ பரவியுள்ள எண்ணெய் கழிவை எப்படி Trace of  Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்” என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.


இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ” 9 ஆம் தேதி CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11 கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது” என பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வாதிட்டது. மேலும், “ CPCL ஆலை அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததும், மழைநீர் தேக்கி வைக்கும் குளம் போதுமனதாக இல்லாததும் முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்குக் காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.