கரூர் மகாதானபுரம் அருகே ரயில் மோதியதில் மூளைச்சாவு அடைந்த இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மகாதானபுரம் கம்மாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு நவீன் குமார் (30), சுபாஷ் (23) ஆகிய இரு மகன்களும், ரம்யா (25) என்ற மகளும் உண்டு. ராஜேந்திரனும், விஜயாவும் கோவை பீளமேட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கொத்தனார் வேலைக்கு சென்று வருகிறார்கள்.




டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள சுபாஷ் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். கடந்த 10ம் தேதி ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்காக, கம்மாநல்லூருக்கு சுபாஷ் வந்திருந்தார். கடந்த 12ஆம் தேதி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று ஓட்டுனர் உரிமம் பெற்ற அவர் அன்று மாலை ஊருக்குச் செல்வதற்காக தனது துணிமணிகளை பையில் எடுத்து வைத்து தயாரானார்.




பின்னர், அவர் அருகிலுள்ள ரயில் தண்டவாள பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற பயணிகள் சிறப்பு ரயில், சுபாஷ் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் மூளைச் சாவு அடைந்தார். இதைக் கேட்டு கதறி அழுத சுபாஷின் பெற்றோர் மனதை தேற்றிக்கொண்டு, தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.




இதுபற்றி டாக்டர்கள், மருத்துவமனை டீன் நேருக்கு தகவல் கொடுத்தனர். அவர் முறைப்படி உடல், உறுப்பு தானம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். இதை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவருடைய இதயம் நுரையீரல் 2 சிறுநீரகங்கள் ஆகியவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். பின்னர் அவை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இதயம், நுரையீரல் ஆகியவை திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளுக்கு அவை பொருத்தப்பட்டது.




2 சிறுநீரகங்களில் ஒன்று மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. சுபாஷ் இறந்தாலும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ததால், 4 பேருக்கு மறுவாழ்வு அளித்து இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பின்னர் சுபாஷின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.