போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட போதைப்பொருள் த்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த 3 ஆண்டுகளாகவே இந்த கும்பல் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கடத்தியதும், இதற்கு தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக்  இருப்பதும் கண்டறியப்பட்டது. 


தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாஃபர் சாதிக்கிற்கும், இயக்குநர் அமீருக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.  ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்ற விசாரணையில் ஆஜரானார்.


இது ஒருபக்கம் இருக்க, சென்னை சாந்தோமில் இருக்கும் ஜாஃபர் சாதிக்கின் வீட்டிற்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால் சீல் அகற்ற கோரி ஜாஃபர் சாதிக்கின் மனைவி டெல்லி பாட்யாலா நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சீல் அகற்ற உத்தவிடப்பட்டது. அங்கு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில், சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்பு படையினரின் உதவியால் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், நடிகர் அமீர் அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.