கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் நடத்தி வரும் நிறுவன அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர். 


செந்தில்பாலாஜி அலுவலகத்திற்கு சீல்:


தங்களது அனுமதி இன்றி அலுவலகத்தை திறக்க கூடாது என்றும் சென்னையில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.  கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகத்துக்கு சீல் வைத்து அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.


நேற்று காலை 8 மணி முதல் கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர்.


நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு:


அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் சோதனை மேற்கொண்ட பின் கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அபெக்ஸ் இம்பெக்ஸில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர். அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவினரால், நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நீதிமன்ற விசாரணை


இந்ந நிலையில், தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனவும் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். 


கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அவர், இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், வழக்கு பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.