அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவரது மூத்த மகன் கௌதமசிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இதனிடையே நேற்றைய தினம் சென்னை மற்றும் விழுப்புரத்தில்  பொன்முடி மற்றும் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 13 மணி நேரம் நடந்த இந்த சோதனைக்குப் பின் அதிகாரிகள் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். 


அதிகாலை 3 மணி வரை விசாரணை நடைபெற்ற நிலையில் இருவரும் வீட்டுக்கு சென்றார். அவரை மீண்டும் இன்று மாலை ஆஜராக அமலாக்கத்துறையினர் கூறிய நிலையில் பொன்முடி மற்றும் கௌதம சிகாமணி இருவரும் ஆவணங்களுடன் 2வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். இதனிடையே பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்றது குறித்த தகவல்களை அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதோடு அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. 


அதில், “சுரங்கத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி தனது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிதாரர்களுக்கு சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் அள்ளுவதற்கான உரிமம் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் பெறப்பட்ட வருமானம் பினாமி கணக்குகளில் பல பரிவர்த்தனைகளாக டெபாசிட் செய்யப்பட்டது. PT Excel Mengindo என்ற இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்திற்கு விலைக்கு வாங்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் M/s Universal Business Ventures FZE  என்ற நிறுவனமும் வாங்கப்பட்டுள்ளது. 


இந்த வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதில் ஹவாலா மூலம் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அதில்சந்தேகத்திற்கு இடமான  ஆவணங்கள், வெளிநாட்டு பணம் ரூ.13 லட்சம் (தோராயமாக), கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது.  இதுதொடர்பான விசாரணையில் சம்பந்தப்பட்ட பணம் குடும்பத்திற்குச் சொந்தமான மருத்துவமனைக்குச் சொந்தமானது என கூறப்பட்டது. 


பொன்முடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. சட்டவிரோத வருமானம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு  தொடர்புடைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அமலாக்கத்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்பு நிதி முடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.