அமலாக்கத்துறை முன்பு ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகமல் உள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு இதய நோய் இருப்பதால் ஆஜராக மேலும் 4 வாரம் அவகாசம் கோரியுள்ளார் என அவரது வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வரும் நிலையில் அசோக்குமார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. 


செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு


அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனையை தொடங்கியது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  அங்கு அவருக்கு ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 


இதனிடையே, அமலாக்கத்துறை அவரை கைது செய்ததை தொடர்ந்து, செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது அதில் இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டு இருந்ததால், 3 வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த மனு மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.  தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் கஸ்ட்டடியில் எடுக்க வேண்டியது அவசியம்” என கூறியுள்ளார்.  நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறிய காரணத்திலும் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் செந்தில் பாலாஜியின் சிகிச்சை முடிந்ததும் காவலில் எடுக்கலாம் எனவும், அதேபோல் சிகிச்சை நாட்களை நீதிமன்றம் நாட்களாக கருத முடியாது” என குறிப்பிட்டு தீர்ப்பை வழங்கினார்.


ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக அறுவை சிகிச்சை நடந்து தொடர் சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, 18 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


இது ஒருபுறம் இருக்க,  தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிகக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில், கைது செய்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்றும் அமலாக்கத்துறை தரப்பில் இருக்கும் நியாயங்களை முன்வைத்து வாதிடப்பட்டது.


செந்தில் பாலாஜி தரப்பில், கைது நடவடிக்கை என்பது தவறானது என்றும் ஏற்கனவே 15 நாட்கள் முடிந்த நிலையில் மீண்டும் காவலில் எப்படி எடுக்க முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் அமலாக்கத்துறை வாதம் எடுத்துக்கொள்ள கூடாது என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டது.  இதனை கேட்ட நீதிபதி அமலாக்கத்துறை தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.