புதுச்சேரி: புதுச்சேரியில் இன்னும் இரண்டு மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், உதவியாளர் 256, கிராம நிர்வாக அலுவலர் (VAO) 41, கிராம உதவியாளர் 54, பல்நோக்கு பணியாளர் 9 என மொத்தம் 360 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

படித்த இளைஞர்களுக்கு நிரந்தரமான அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது. பல ஆண்டுகளாகப் புதுச்சேரியில் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த ஆட்சியில் எந்தப் பணியிடமும் நிரப்பப்படவில்லை. இதனால் வயது முதிர்ந்துவிடும் என இளைஞர்கள் அச்சத்தில் இருந்தனர். அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், அரசுப் பணியிடங்களைத் தொடர்ச்சியாக நிரப்பி வருகிறோம்.

அரசுப் பணிகளில் தொய்வு இருந்தது. போதுமான பணி செய்ய அதிகாரிகள், ஊழியர்கள் இல்லை என்பதே காரணம். இப்படி இருந்தால் மாநிலத்தை எப்படி வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்? மக்களுக்கும் எப்படிச் சேவையாற்ற முடியும்? கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அரசின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தோம். அதன்படியே நிரப்பியும் வருகிறோம். இதுமட்டுமின்றி, அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களைக் குறித்த நேரத்தில் சென்றடைந்துள்ளது.

3,264 பணியிடங்களை நிரப்பியுள்ளோம்!

மாதந்தோறும் 7ஆம் தேதி முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்து வருகிறது. இதுவரை 3,264 பணியிடங்களை நிரப்பியுள்ளோம். இன்னும் 2 மாதத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு தேதி விவரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்களுக்கு ஓரிரு நாளில் பணி ஆணை வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்களை நிரப்ப உறுதுணையாக இருக்கும் கவர்னர், தலைமைச் செயலர், அரசுச் செயலர்கள், அதிகாரிகளுக்கு நன்றி. தேர்தலுக்கு முன்பாக அனைத்து அரசுப் பணியிடங்களையும் நிரப்ப அதிகாரிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இந்த வேலை கனவாக இருந்து நிறைவேறியுள்ளது.

எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் எனத் தெரியும்!

நீங்கள் ஒரு சாதிச் சான்றிதழை பெற எவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள் எனத் தெரியும். இதுபோல் மக்களும் எந்தச் சிரமமும் இல்லாமல் சேவைகள் கிடைக்க நீங்கள் பணியாற்ற வேண்டும். நல்ல அதிகாரி என்ற பெயரை மக்களிடம் சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி  பேசினார்.