கரூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். துணை மேயர் தாரணி சரவணன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 101 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அப்போது கவுன்சிலர்கள் கூறுகையில், 14வது வார்டு பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்ட நிலையில், அங்கு வரும் குழந்தைகளுக்கு கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளது.
கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் வியாபாரி அல்லாத நபருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதற்கு மேயர் பதில் அளித்து கூறுகையில், கரூர் காமராஜ் மார்க்கெட்டில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணி தொடங்கி, நடைபெற்று வருவதால் ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த கடைகளுக்கு பதிலாக அப்பகுதியில், 97 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 40 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. தனிநபர் யாருக்கும் அங்கு கடை ஒதுக்கப்படவில்லை என்றார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் கூறுகையில், அங்கு இயங்கி வரும் தற்காலிக கடைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு மட்டுமே முறைப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. தனி நபர் யாருக்கும் அங்கு கடை ஒதுக்கப்படவில்லை என்றார். இதனை அடுத்து நடைபெற்ற அவசர கூட்டத்தில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் ரூ.62 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்வதற்கு நிர்வாகம் அனுமதி வழங்கியது எனவும், அதன்படி தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு பணிகளை மேற்கொள்ள, முதன் முறையாக 3.8.2022 அன்று ஒப்பந்தப்புள்ளி கூறப்பட்டதில், ஒப்பந்ததாரிடம் இருந்து வரப்பெற்ற ஒப்பந்தங்களை முடிவு செய்ய மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவர் வெளிநடப்பு செய்த நிலையில், மற்றொருவர் உள்ளே இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், தோரணக்கல் பட்டியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் கொண்டுவரப்பட்டது. ஆனால், திருமாநிலையூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் தொடங்கப்பட உள்ளது. இதில் தனியார் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், தி.மு.க., அரசு செயல்படுகிறது.
கடந்த ஆட்சி காலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த திட்டங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் இடமாற்றம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் 200 ஏக்கர் இடம் வாங்கி விட்டு பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. வராத பஸ் ஸ்டாண்ட் இடத்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் வெளிநடப்பு செய்தார். மற்றொரு அ.தி.மு.க., கவுன்சிலர் தினேஷ் வெளிநடப்பு செய்யாமல், தொடர்ந்து தன் வார்டு குறித்து கேள்வி எழுப்பினார். திருமாநிலையூர் பஸ் ஸ்டாண்ட் தீர்மானம் தொடர்பாக அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முரண்பாடான முடிவால், அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.