கரூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரியும்போது, அதிலிருந்து கரும்புகை வெளியே வந்தது. திடீரென தீப்பிடித்ததால் அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.


எலக்ட்ரிக் பைக்கில் திடீரென பிடித்த தீ:


இந்திய இரு சக்கர வாகன சந்தையில் கடந்த 2-3 ஆண்டுகளில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, 2024 ஆம் ஆண்டு நாட்டில் பல பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.


மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே சமயத்தில் மின்சார வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், கரூரில் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது.


 






இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரியும்போது, அதிலிருந்து கரும்புகை வெளியே வந்தது.


தொடரும் விபத்துகள்:


பைக் திடீரென தீப்பிடித்ததால் அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தினர். மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிவது குறித்து உரிய விசாரணை நடத்தி அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 


கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், கர்நாடக மாநிலத்தில் மட்டும் மின்சார வாகனங்கள் (EVகள்) தீப்பிடித்ததாக 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. கர்நாடகாவின் பல மாவட்டங்களில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மின்சார கசிவு, பேட்டரி வெடிப்பு மற்றும் மின்சார வாகனங்களில் ஏற்பட்ட தற்செயலான தீ விபத்து என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


2024ஆம் ஆண்டு மட்டும் இதுதொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு, 28 வழக்குகளும் 2022 ஆம் ஆண்டு, 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு, மின்சார வாகன விபத்து என 7 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு, 3 வழக்குகள் பதிவாகியுள்ளன.


83 தீ விபத்துகளில், 65 விபத்துகள் மின் கசிவு காரணமாகவும், 13 விபத்துகள் பேட்டரி வெடிப்பாலும் ஐந்து விபத்து தீ விபத்து காரணமாகவும் பதிவாகியுள்ளன. பெரும்பாலான வழக்குகள் மின்சார இரு சக்கர வாகனங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மின்சார கார்கள், ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்டது.