Voter Special Buses Tamilnadu : நாடே மிகவும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் கட்சி தலைவர்கள் இன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே என 4 முனை போட்டி நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்குப்பதிவு செய்யலாம்.
மக்களின் வசதிக்காக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 17 மற்றும் ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7,184 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 3,080 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று இயக்கப்படும் பேருந்துகளில் மொத்தம் உள்ள 31,308 இருக்கைகளில் 6,475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 24,833 இருக்கைகள் காலியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள சிறப்பு கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாள் மற்றும் வார இறுதி நாட்கள் ஒன்று சேர வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படை எடுத்துள்ளனர். வழக்கமாக மக்களின் வசதிக்காக முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
நாளை மறுநாள் வாக்குப்பதிவு என்பதால், பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில், அனைத்து பணிகளும் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, வாக்குப்பதிவு மையங்களில் சிசிடிவி கேமராக்கள், பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகம் என பறக்கும் படை மற்றும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.