தமிழகத்தில் 97 லட்சம் பேர் நீக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் மத்தியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் ஒரு பக்கம் தொடங்கியிருந்தாலும், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியில் தயார் செய்யும் பணியில் களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி உடன் முடிவுற்றது. இதில்  இறந்தவர்களின் பெயர்கள், இரட்டை பதிவு, அடையாளங்களை கண்டறியமுடியாதவர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் சுமார் 1 கோடி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Continues below advertisement

10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்

இதனையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டனர். இதற்கான சென்னையிலும் தினந்தோறும் சிறப்பு முகாமும், மற்ற மாவட்டங்களில் வார இறுதி நாளில் சிறப்பு முகாமும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் எஸ் ஐ ஆர்  படிவங்களில் முறையாக விவரங்களை தெரிவிக்காத சுமார்  10 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எஸ் ஐ ஆர் படிவங்களில்  2002 மற்றும் 2005‌ ஆம் ஆண்டுதங்களுடைய பெயரோ அல்லது உறவினர்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தால் அந்தத் தகவல்களை படிவங்களில் குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் படிவங்களை சரவர பூர்த்தி செய்யாத வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டனர். 

இதனையடுத்து படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத சுமார் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகத்திலிருந்து வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்ப நோட்டீஸ் அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ்க்கு பதில் அளிக்கும் வகையில் நேட்டிவிட்டி சான்றிதழ் மற்றும் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்  உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தல் ஆணையத்தால் நோட்டீஸ் கிடைக்க பெற்றவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசும் களத்தில் இறங்கியுள்ளது. அந்த வகையில் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர் அமுதா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

Continues below advertisement

குடியிருப்பு சான்றிதழ்-கட்டண விலக்கு

அதில்,  நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்தால் அதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும் நிலை உள்ளது. மேலும் கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே கட்டண விலக்கு அளித்து நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் நேட்டிவிட்டி சர்டிபிகேட் கோரி வாக்காளர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் எஸ் ஐ ஆர் படிவங்கள் தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் கோரி வாக்காளர்கள் விண்ணப்பித்தால் உரிய சான்றிதழ்களை கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று வருவாய் துறை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.