கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொசு மருந்து அடித்ததால் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொசுகளை அழிக்கும் பணி தொடக்கம்
பொதுவாக வெயில் காலம் முடிந்து மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொசு மருந்து ஒவ்வொரு கழிவு நீர் கால்வாயிலும் அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்படியான நிலையில் கொசு மருந்து அடித்ததால் இரண்டு முதியவர்கள் உயிரிழந்ததாக வெளியாகி உள்ள தகவல் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் நடந்தது என்ன?
இந்த சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழாவது வார்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அன்னூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்துள்ளது. உடனடியாக அதிகாரிகள் களத்தில் இறங்கி அன்னூர், சத்தியமங்கலம் சாலை, உப்பு தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கொசு மருந்து அடிக்கும் பணியை நேற்று முன்தினம் தொடங்கியுள்ளனர்.
பொதுவாக கொசு மருந்து கழிவு நீர் கால்வாய், குப்பை தொட்டி, வீட்டைச் சுற்றி மட்டுமே அடிக்கப்படுவது வழக்கம். ஆனால் அன்னூர் பேரூராட்சி ஊழியர்கள் கொசு மருந்தை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று அடித்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அதனை மேற்கொண்டுள்ளனர்.
இரு முதியவர்கள் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு
இந்த நிலையில் கொசு மருந்து புகையால் உப்பு தோட்டம் பகுதியில் வசித்து வரும் மோகன் என்ற 65 வயது நபரும், ராணி என்கிற பிரேமா என்ற 75 பெண்மணியும் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அவர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் நுரையீரல் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கொசு மருந்து அடித்து விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கொசு மருந்தை அதிகமான தண்ணீரில் கலந்து அடிக்காமல் குறைவான தண்ணீரில் கலந்து அடித்து அடித்ததாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் விளக்கம்
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடியிருப்புகளை சுற்றி 400 மீட்டர் தொலைவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதால் பணியை மேற்கொண்டதாக தெரிவித்தார். இதனை அப்பகுதி மக்கள் ஏற்காமல் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே சமயம் கொசு மருந்து அடிப்பதால் பொதுமக்களுக்கு எந்தவித மூச்சு திணறலும் ஏற்படாது. எனினும் உயிரிழந்த மோகன் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இரண்டு நாட்களில் உயிரிழந்து விடுவார் என தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. அதேபோல் ராணி என்கிற பிரேமா என்ற பெண்மணி நுரையீரல் பிரச்சனை காரணமாகவே உயிரிழந்துள்ளார். ஆனால் கொசு மருந்து அடித்ததால் தான் இறந்ததாக பொதுமக்கள் கூறி வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
