மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களில் பங்கு கேட்டு முதியவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏகப்பட்ட எதிர்பாராத சம்பவங்கள் நடந்த நிலையில் அவரது வாரிசு என கூறிக்கொண்டு சிலர் பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த வகையில் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவியின் மகன் என கூறி, ஜெயலலிதாவின் சொத்துகளில் பாதி பங்கை தனக்கு வழங்க கோரி மைசூருவை சேர்ந்த முதியவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள வியாசராபுரத்தை சேர்ந்த 83 வயது முதியவரான வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் தந்தையான ஆர்.ஜெயராம் தான் தனக்கும் தந்தை என்றும், ஜெயராமின் முதல் மனைவி ஜெ.ஜெயம்மா என்றும், இவர்களின் ஒரே வாரிசு நான் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தந்தை ஜெயராம் இரண்டாவதாக வேதவல்லி என்கிற வேதம்மாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம்தான், ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் பிறந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஜெயலலிதா, ஜெயக்குமார் ஆகியோர் எனது சகோதர, சகோதரி என்றும்,1950 ஆம் ஆண்டில் ஜீவனாம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயம்மா வழக்கு தொடர்ந்தபோது, அந்த வழக்கில் தந்தையின் இரண்டாவது மனைவி வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு இருந்ததாகவும் வாசுதேவன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இந்த வழக்கு சமரசத்தில் முடிந்துவிட்டது. ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே ஜெயக்குமார் இறந்துவிட்ட நிலையில் இன்றைய தினத்தில் சகோதரன் என்ற முறையில் ஜெயலலிதாவின் நேரடிவாரிசு நான்தான் எனவும் வாசுதேவன் கூறியுள்ளார். ஆகவே ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதத்தை தனக்கு தர வேண்டுமெனவும், ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிகள் என்று 2020 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இதே கர்நாடக மாநிலத்தை அம்ருதா என்பவர் நடிகர் ஷோபன்பாபுவிற்கும், ஜெயலலிதாவிற்கும் பிறந்த மகள் என வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அது பொய் வழக்கு என கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு பங்கு கோரி புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்