ஆசிரியர் மனசு: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஒருமுறை எனது இல்ல விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி ”ஆசிரியர்களுடன் அன்பில்” நிகழ்வில் பங்கேற்றதன் மூலம் கிடைத்துள்ளது என புதுக்கோட்டையில் ஆசிரியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்காக ஆசிரிய பெருமக்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகதான் ஆசிரியர் மனசு பெட்டி எனது வீட்டிலும், அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது. கடைக்கோடியில் வசிக்கும் ஆசிரியர்களும் தங்களின் கோரிக்கை மனுவினை மிக எளிதாக அளிக்க வேண்டும் என்பதற்காகதான் புதுக்கோட்டை நகரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளையும் அறிமுகம் செய்து வைத்தேன். aasiriyarmanasu@gmail.com. aasiriyarkaludananbil@gmail.com.
மின்னஞ்சல்கள் மூலம் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கையினை அளிக்கலாம். ஆசிரியர்களின் கோரிக்கையை நிச்சயம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்றுவார்! மீண்டும் சந்திப்போம்! உரையாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசாக 2021ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பேற்றுக் கொண்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரோடு அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இம்முறை பொறுப்பேற்றுள்ள திமுக அரசில் மிகவும் இளம் வயது அமைச்சராக பொறுப்பேற்றவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், மண்டல அளவிலான கலந்துரையாடலை ஆசிரியர்களுடன் கலந்திரையாடல் நடத்தி ஆசிரியர்களின் தேவைகளை கேட்டறிந்த்தார். அதேபோல், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டங்கள் குறித்த அறிவுரைகளையும் வழங்கியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் அறிமுகப்படுத்தியுள்ள ஆசிரியர் மனசு திட்டம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆசிரியர்கள் இடத்தில் அவர்களின், கோரிக்கைகளை உடனடியாக மற்றும் நேரடியாக அரசிடம் தெரிவித்து தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்