பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எடப்படி பழனிசாமி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு சரியாக பதிலளிக்காமல் நழுவியுள்ளார்.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பின்னர், அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், வரும் 17ம் தேதி அதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுகவே களமிறங்கி, வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால், தற்போது அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


'அப்புறம் சொல்றோம்' எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி


இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில், இன்று(11.01.2025) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு முன்பாகவே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, அதெல்லாம் அப்புறம் சொல்றோம் எனக் கூறி, பதிலளிக்காமல் எஸ்கேப் ஆனால் எடப்பாடி பழனிசாமி. எனினும், இறுதியாக பேசும்போது, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தற்போது நடைபெறும் கூட்டத்தில் தான் முடிவெடுக்க வேண்டும் என கூறிச் சென்றார்.