மாநகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கெனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை:
இதுதொடர்பான அறிக்கையில் “ எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி முதலமைச்சராக இருந்தபோது நான் அறிவிப்பு வெளியிட்டேன். நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும், 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் இயற்கைச் சீற்றங்களினால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை. மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் இவ்வாறு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வலியுறுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, 18.11.2022 அன்று நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், நாகர்கோவிலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும், பின்னர் இது மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அவ்வாறு உறுதி அளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்னரும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லாததால், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாகர்கோவிலில் கட்டட அனுமதி இல்லாமல் இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளில், மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டும், உடனடியாக புதிய கட்டடங்கள் மற்றும் மின் இணைப்புக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் 11.4.2023 அன்று, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் கேள்வி எழுப்பினார்.
அப்போது பதில் அளித்துப் பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், "தொடர் கட்டடம் - Continuous Building area - அதைப்பற்றி ஒரு பிரச்சினை இருக்கிறது. அதற்கு வழிவகை செய்வதற்காக ஏற்கெனவே துறையின் மூலமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார். அதேபோல், Planning Permission இல்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் பற்றிய பிரச்சனையும் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் ஒருங்கிணைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். திமுக அரசின் அமைச்சர் உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.
எனவே, நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள Continuous Building area மற்றும் Planning Permission ஆகிய பிரச்சனைகளை சரிசெய்து, உடனடியாக கட்டட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வெளியிட வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இந்த அரசாணை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும்படியான உத்தரவாக வெளியிட்டு, அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.