விழுப்புரம் : எஸ்.ஐ.ஆர் திட்டத்தை ஆதரித்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைத்துள்ளார், அதிமுக அமித்ஷாவின் கைகளுக்கு சென்று விட்டது, பாஜகவின் ஒரு கிளை அமைப்பாக அதிமுக செயல்படுகிறது. செஞ்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கிளை செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் பொது நிதி ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
திமுக 76 ஆவது ஆண்டில் வெற்றி நடைப்போட்டு சென்று கொண்டிருக்கிறது. 76 ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்கள், தியாகங்கள், நெருக்கடிகள், நெருப்பாருகளை கடந்து திமுக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் திமுக வலிமையோடும், இளமையோடு இருக்க நிர்வாகிகள் தான் காரணம். தமிழ்நாடு அரசுக்கு எப்படியாவது தொந்தரவு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை பழி தீர்க்க வேண்டும் என பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை அனுமதித்தால் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் ஹிந்தி வரும். மீண்டும் இந்திய திணிப்பார்கள். குறுக்கும் வழியில் சமஸ்கிருதத்தையும் திணிப்பார்கள்.
ஒன்றிய அரசு ஒரு முடிவை எடுக்கும் போது மற்ற மாநில முதல்வர்கள், மக்கள் தமிழ்நாடு முதல்வர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை கவனிக்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் திட்டத்தை கொண்டு வந்து ஒன்றிய அரசு தேர்தல் ஆணையம் மூலமாக செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் கொண்டு வருவதன் நோக்கமே இஸ்லாமியர்கள், மகளிர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்குவது தான் ஒன்றிய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறைமுக திட்டம். எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு எதிராக திமுக சட்ட ரீதியான போராட்டத்தை நடத்தி வருகிறது. மற்றொருபுறம் மக்களின் வாக்குகளை பாதுக்காக்க இரவு பகல் பாராமல் திமுகவினர் தான் களத்தில் நின்று வாக்குரிமையை காப்பாற்றி வருகிறது. அதிமுகவினர் எஸ்.ஐ.ஆர்-ரில் என்ன பிரச்சனை என்பதை இன்றைக்கு தான் பேச ஆரம்பித்துள்ளனர்.
எடப்பாடி பழனிச்சாமி எஸ்.ஐ.ஆர் திட்டத்தை ஆதரிக்கிறார். அவருக்கு வேறு வழி இல்லை. எதிர்த்தால் அமித்ஷா கோபித்துக் கொள்வார். அமித்ஷாவுக்கு எதிராக மூச்சு விடக்கூட எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். குனிந்து, குனிந்து அடிமைகளின் முதுகெலும்பு முறிந்து போனதுதான் மிச்சம். பாஜகவின் ஒரு கிளை வெப்பமாக அதிமுக திகழ்கிறது. அது அதிமுக இல்லை அமித்ஷா திராவிட முன்னேற்ற கழகம். அதிமுகவின் தலைமையிடம் டெல்லியின் உள்ள அமித்ஷாவின் வீடு தான். அதிமுகவில் ஒவ்வொருவரும் பொய் சொல்லிவிட்டு கார்கள் மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள். முன்பு திருட்டுத்தனமாக சென்று வந்தார்கள். தற்போது வெளிப்படையாக செல்கிறார்கள். செங்கோட்டையன் ஆன்மீகப் பயணம் என கூறிவிட்டு அதிஷாவை பார்த்துவிட்டு வந்தார். இன்றைக்கு அமித்ஷாவின் அனுமதியோடு செங்கோட்டையன் ஒரு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லி சென்று வந்துள்ளார். அதிமுக அமித்ஷாவின் கைகளுக்கு சென்று விட்டது. தமிழ்நாட்டுக்கு எதிராக ஒன்றிய அரசு என்ன செய்தாலும் அடிமைகள் வாய்மூடி உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் மசோதா, இன்றைக்கு எஸ்.ஐ.ஆர் திட்டத்தையும் ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகத்தை இழைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா, டிடிவி.தினகரன், பன்னீர்செல்வம், செங்கோட்டையன் என ஆகியோருக்கு துரோகம் இழைத்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யாத ஒரே நபர் அமித்ஷா மட்டும் தான் என பேசினார். நிகழ்ச்சி முடியும் முன்பாகவே வரவேற்புக்காக கட்டப்பட்டிருந்த வாழை மரங்களில் இருந்து வாழைத்தார்களை பொதுமக்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.