மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே புகுந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி, வெறும் 5 மாதங்களில் விசாரணை முற்றிலுமாக முடிக்கப்பட்டது. அதன் முடிவில், ஞானசேகரன் மீது சுமத்தப்பட்டு இருந்த 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 28ம் தேதி நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்தார்.

Continues below advertisement

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு:

அதேநேரம், குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் வரும் ஜுன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, இன்று ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட 11 குற்றப்பிரிவுகளுக்கு தனித்தனியாக 11 தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தண்டனை குறைப்பு இன்றி ஏக காலத்திற்கும் சிறை தண்டனை அனுபவிக்கவும் என்பதோடு, 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஞானசேகரனுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனின் தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திமுக அரசு மீது அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கின் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

பஞ்ச் பேசிய இபிஎஸ்:

அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அதிமுக.

பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் #யார்_அந்த_SIR என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம்.

FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled-out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு? #SIRஐ_காப்பாற்றியது_யார்? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது.

அதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது!" என பதிவிட்டுள்ளார்.