தந்தை மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் பெரும்பாலும் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், விருது விழாக்கள் என எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த பொங்கலன்று “துணிவு” படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க உள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 


அதற்கு முன்னால் உலக நாடுகளில் அவர் பைக் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில்  அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார்.அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் அஜித்தின் இல்லம் முன்பு குவியத் தொடங்கினர்.


ஆனால்  எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பயும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என தெரிவித்தார். அதேபோல் ரசிகர்கள் தங்கள் இரங்கல் செய்திகளை மின்னஞ்சல் வழியாக அனுப்பும்படி கோரி, மின்னஞ்சல் முகவரியையும் அஜித் தன் அறிக்கையில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்ததோடு, ஆறுதல் கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்த அஜித், பதிலுக்கு அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.