ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது மனைவி பவானி(29) என்பவர் கந்தன் சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் வேலைக்கு ரயிலில் செல்லும் போது ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாகவும், இதற்காக தனது 20 சவரன் நகைகளை விற்றதும், தனது சகோதரிகளிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் தொடரும் தற்கொலை சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் இவ்விவகாரத்தில் எதிர்கட்சிகள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளது. 






கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி குறித்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி அதிகளவில் நடந்து வருவதாகவும், இந்த  விளையாட்டு முதலில் ஜெயிப்பது போல ஆசையை தூண்டிவிட்டு பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள்  வருவதை பார்த்து யாரும் ஏமாந்து இந்த மோசடியில் சிக்க வேண்டாம். இது ஆன்லைன் ரம்மி அல்ல...மோசடி ரம்மி... என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். 


அதேபோல தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த அதிமுகம் ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். 


ஆனால் மீண்டும் தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தமிழக அரசுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சென்னையில் இன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் இன்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது. காவல்துறை டிஜிபி-யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரைக் கொல்லலாம்என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்? என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண