ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாது என அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேசமயம் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “துயரமான இந்த நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டமே கள்ளச்சாராய மரணத்தால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கள்ளச்சாராய மரணத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் நடமாட்டம், விற்பனை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் கூட்டம் போட்டு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
செய்திகளில் மட்டும் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை அடியோடு ஒழிக்கப்படும் என இடம் பெறுகிறது. ஆனால் அதற்கான நடவடிக்கை என்பது இல்லை. மாவட்ட காவல் நிலையம், ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது என்றால் எந்த மாதிரியான ஆட்சி நடைபெறுகிறது என்பதை காணலாம்.
ஆளும் கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடைபெறாது. இன்று ஆட்சியாளர்களின் அடாவடித்தனமான செயல், முதலமைச்சரின் நிர்வாக திறமையற்ற செயல் ஆகியவை காரணமாக 60 பேர் மரணமடைந்துள்ளதாக செய்திகளில் தெரிவித்துள்ளார்கள். அரசு தகவல்படி 58 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளர்கள். அத்தனை பேர் இறப்புக்கும் இந்த அரசு தான் பொறுப்பு. தமிழ்நாடு அரசின் அலட்சியம் தான் காரணம்.
இதனையெல்லாம் மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலமைச்சர் அடக்குமுறையை கையாளுகிறார். அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருக்கிறார்கள். நான் நின்று கொண்டிருக்கும் மேடையும் அகற்றப்பட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டது தான். ஆர்ப்பாட்டத்திற்கு வருபவர்களை எல்லாம் தடுக்கிறார்கள். காற்றை எப்படி தடுக்க முடியாதோ அதுபோல் மக்கள் உணர்வையும் தடுக்க முடியாது. இதற்கு எல்லாம் வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க வேண்டும் என்று தான் அதிமுக போராடி கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிகாரமிக்கவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்கள். உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும். இனி இப்படிப்பட்ட சம்பவம் நடைபெறா வண்ணம் இருக்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும். அதற்காக எத்தனை தியாகம் வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயார்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.