EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
எஸ்பி வேலுமணி உள்பட எடப்பாடி பழனிசாமியை எதிர்த்த அதிமுக எம்எல்ஏ-க்கள் மீண்டும் அவரிடமே தஞ்சம் அடைந்திருப்பதால் அதிமுக-வில் நிலவிய உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்தது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக அதிமுக மாறியுள்ளது. அதிமுக-வின் வரலாற்றில் எந்த கட்சியும் செய்ய முடியாத சாதனைகளும், எந்த கட்சியும் சந்திக்காத இறக்கங்களும் இருந்து வருகிறது.
இபிஎஸ்-சிடம் தஞ்சம்:
ஆனால், இந்த முறை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கட்சி மிகப்பெரிய பிளவைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. 47 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியிருந்த சூழலில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியினர் போர்க்கொடி தூக்கினர். தவெக ஆட்சியில் இடம் கிடைக்கும் என்று போர்க்கொடி தூக்கியவர்களுக்கு விஜய் ஏமாற்றத்தையே பரிசாக அளித்தார்.
இந்த சூழலில், என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தஞ்சம் அடைந்துள்ளனர். எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்று கொண்டிருந்த சூழலில், இன்று சிவி சண்முகம் தவிர மற்ற அனைவரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை மீண்டும் அளித்தனர். சிவி சண்முகத்தையும் மீண்டும் உள்ளே கொண்டு வர தங்கமணி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் பொறுப்பு வழங்குவாரா?
தன்னை வீழ்த்தி தனது பொதுச்செயலாளர் பதவியை பறிக்க நினைத்தவர்களை மீண்டும் தனது தலைமையை எடப்பாடி பழனிசாமி ஏற்க வைத்திருப்பது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்களுக்கு எதிராக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்களுக்கு பதிலாக அவர் புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த சூழலில், எதிராக திரும்பியவர்கள் தன்னிடமே தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வழங்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் மற்ற நிர்வாகிகளை காட்டிலும் சிவி சண்முகம் மீதுதான் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் திமுக - அதிமுக கூட்டணி விவகாரத்தை போட்டு உடைத்ததுடன், எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து பேசியது அவருக்கு மிகப்பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவருக்கு மீண்டும் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக சட்டமன்ற தலைவர்:
தனக்கு எதிராக திரும்பியவர்களை மீண்டும் தன் பக்கமே இழுத்து தன்னை விமர்சித்தவர்களுக்கும், கட்சியை கைப்பற்ற நினைத்தவர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். இதனால், அதிமுக-வின் சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பு ஏற்க உள்ளது உறுதியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அதிமுக-வில் நிகழ்ந்து வந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்திருப்பதால் அந்த கட்சியின் தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த தேர்தலில் தங்களது பலத்தை காட்ட அதிமுக பணிகளைத் தொடங்க உள்ளது. அதற்கான பணிகளை விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார்.
மேலும், இதற்கு பின்பு தனக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் யாரும் செயல்படாத வகையிலும், தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் தனது தலைமையைப் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















