தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக பதவியேறறுக் கொண்ட தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வராததாலும், தினசரி உயிரழப்பு 400 என்ற அளவில் பதிவாகி வருகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் நாளை முதல் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக வரும் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கின்போது மிக இன்றியமையாத சில பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் ஆகியவை மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதேபோல துறைமுகங்கள், விமான நிலையங்கள், சரக்கு கிடங்குகள், தொலைத்தொடர்பு சேவைகள், அத்தியாவசிய தரவு மையங்கள் பராமரிப்பு பணிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளன.




இந்த தொழிற்சாலை பணியாளர்கள் பணிக்கு சென்றுவர ஏற்கனவே இ-பதிவு முறையில் https://eregister.tnega.org/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே இ பதிவு செய்துள்ள வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி புதுப்பித்து அளிக்கப்படும். இரு சக்கர வாகனங்களில் பணியாளர்கள் பணிக்கு சென்று வர 25-ஆம் தேதி முதல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆதலால், இந்த தொழிற்சாலைகள் தங்கள் பணியாளர்களை பணிக்கு அழைத்துவர நான்கு சக்கர வாகனங்களை ஏற்பாடு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இந்த நான்கு சக்கர வாகனங்களை இ-பதிவு முறையில் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இ பதிவு செய்து அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட பாஸ்களின் அடிப்படையில் காவல்துறையினர் இந்த வாகனங்களை அனுமதிப்பார்கள். இரு சக்கர வாகனங்களின் அனுமதிகளைத் தவிர மற்ற விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான இ பதிவு தானாகவே புதுப்பிக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பால், காய்கறிகள், மருந்து, ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், சரக்கு போக்குவரத்திற்கு மட்டும் இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதற்காகவும், தளர்வில்லாத ஊரடங்கை முழு அளவில் செயல்படுத்தவும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கவேண்டும் என்று முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.