தமிழ்நாட்டின் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்(KP Anbalagan). இவருக்கு சொந்தமான சென்னை, தருமபுரி உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த விவகாரம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கே.பி.அன்பழகன், அவருடைய மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன் மற்றும் சந்திர மோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தருமபுரி, சென்னை,சேலம் தெலங்கானாவின் கரீம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. வருமானத்தைவிட 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் உள்ள விவரங்கள் என்னென்ன?
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு கே.பி.அன்பழகன் தாக்கல் செய்த சொத்து விவரங்களை வைத்து அவருடைய சொத்து மதிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 27.04.2016 முதல் 15.03.2021 வரை கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்புடைய சொத்துகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2016ஆம் ஆண்டு கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் மொத்தமாக 1,60,50,859 ரூபாய்க்கு சொத்துகள் இருந்துள்ளது.
அதே சொத்து மதிப்புகள் 15.03.2021-ன்படி மொத்தமாக 23,03,86,277 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் மொத்த வருமானம் 23,59,31,984 ரூபாயாக உள்ளது. மேலும் அவர்களின் மொத்த செலவினங்கள் 13,48,92,321 ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றை வைத்து பார்க்கும் 27.04.2016 முதல் 15.03.2021 வரை கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயரில் மொத்தமாக 21,43,35,418 ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் வங்கியில் இவர்கள் பெயரில் உள்ள சேமிப்பு 10,10,39,663 ரூபாயாக இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆகவே இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மொத்த வருமானத்தைவிட 11,32,95,755 ரூபாய் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது தெளிவாக தெரியவந்துள்ளது. ஆகவே கே.பி.அன்பழகன் மற்றும் அவருடைய மனைவி, மகன்கள் மற்றும் மருமகள் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக அரசு பதவியேற்ற பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனைக்கு உள்ளாகும் 6ஆவது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகும். இதற்கு முன்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கேசி வீரமணி உள்ளிட்ட 5 பேர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அதற்கு பின்பு தற்போது கே.பி.அன்பழகனின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை !