முன்னாள் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் ஊழல் செய்துள்ளதாகவும், உணவு கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. காமராஜ் தவிர அவரது மகன்கள், சம்பந்தி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக பொறுப்பு வகித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவருமான சந்திரசேகரின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வருமான வரித்துறை பல இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. கந்தசாமி பதவியேற்றதில் இருந்து முந்தைய ஆட்சியில் ஊழல் புகாரில் சிக்கியவர்களையும், முறைகேட்டு புகாரில் சிக்கியவர்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை குறி வைக்கத் தொடங்கி உள்ளது.
முன்னதாக முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் ட்வீட் செய்துள்ளார்.
காமராஜ் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர். இதனால், மன்னார்குடியில் உள்ள வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு பரபரப்பான சூழல் நிலவியுள்ளது. அங்கு கூடியுள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க. அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்