முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், அதிமுக சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான, தொடர்புடைய 60 இடங்களில் கடந்த 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.  அதிகாலை தொடங்கிய ரெய்டு, நள்ளிரவு வரை நடந்தாலும், பல இடங்களில் ஒரு ’குண்டு பல்பை’ கூட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கொண்டுப்போக முடியவில்லை. ரெய்டு நடந்த பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக இருக்கிறது என அவர்களுக்கு குண்டூசி கூட கிடைக்கவில்லை.



குனியமுத்தூரில் ரெய்டு நடந்த எஸ்.பி.வேலுமணி வீடு


குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிலும், கோவையில் உள்ள அவரது மைத்துனர் வீட்டிலும் பெரிதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை என எழுத்து மூலமாகவே எழுத்துக்கொடுத்து சென்றது லஞ்சப் ஒழிப்புத்துறை. இறுதியாக லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 13 லட்சம் ரூபாயும், 2 கோடி மதிப்பிலான வைப்புத் தொகை ஆவணங்களும், வழக்கிற்கு தேவையான ஹார்ட் டிஸ்க் போன்றவைகளும் மட்டுமே கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இந்நிலையில்தான், லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வருவது முன் கூட்டியே எஸ்.பி.வேலுமணிக்கு சொல்லப்பட்டதாகவும்,  அதனடிப்படையில், ரெய்டை எதிர்கொள்ளும் விதமாக ஆவணங்களை பதுக்கியும், சோதனைக்கு போலீசார் வரும்போது எல்லா இடங்களிலும் அதிமுக தொண்டர்களும், தனது ஆதரவாளர்களும் போராடும்படியும் வேலுமணி ஏற்பாடு செய்துள்ளார் என தகவல் கசியத் தொடங்கின.


திட்டமிட்டதுபோலவே, கோவை, சென்னை என எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் குவிந்த அதிமுகவினருக்கு காலையில் இருந்தே டீ, வடை, கூல்டிரிங்ஸ் சகிதமாக உணவுப் பொட்டலங்களும் வண்டி வண்டியாக கொண்டுவரப்பட்டு, திருவிழாவில் போடும் அன்னதானம் மாதிரி விநியோகிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. இதனாலும், அங்கு கூடியிருந்தவர்களும் களைப்படையாமல் தொடர்ந்து போலீசாருக்கு எதிராகவும் திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியதோடு, அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையெல்லாம் தூக்கி எறிந்து தும்ஷம் செய்தனர்.


இதுமட்டுமின்றி, ரெய்டு நடந்த அன்று வேலுமணி தனது வீட்டில் தங்காமல் எம்.எல்.ஏ –க்கள் குடியிருப்பில் வந்து தங்கியிருப்பதும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருவதை முன்கூட்டியே அவர் தெரிந்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தை பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், போலீசார் மத்தியிலும் எழுப்பியுள்ளது. அதோடு, சோதனை நடந்த அடுத்தநாளான 11ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் ஹாயாக தூத்துக்குடி சென்ற வேலுமணி, திருச்செந்தூர் செல்லும் வழியில் தனது நண்பருக்கு சொந்தமான ஒரு இடத்தில் தங்கி முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தியிருக்கிறார். ஆலோசனை முடிந்து அங்குள்ள ஹோட்டலில் மஞ்சள் சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாக சென்று சாப்பிட்டுவிட்டு, விமானம் ஏறி மீண்டும் சென்னை வந்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.


இந்நிலையில், ஒரு நாள் முழுக்க துருவித் துருவித்  தேடியப்போதும், எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புள்ள இடங்களில் துடுக்காக ஒன்றும் சிக்காததால், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.



 


ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஆதாயம் பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள சில போலீசாரின் மூலமே எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் கசியவிடப்பட்டுள்ளதாக நம்பும் கந்தசாமி, இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.  லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள ‘கருப்பு ஆடுகளை’ முதலில் களையெடுத்தால்தான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொள்ளமுடியும் என்று கர்ஜித்துள்ள கந்தசாமி ஐபிஎஸ், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருக்கிறாராம். விரையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள போலீசார் தண்ணியில்லா காட்டுக்கு (?) தூக்கியடிக்கப்பட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.