TN Footwear: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், உலக காலணி உற்பத்தி துறையின் மையமாக உருவெடுக்கும் வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பு:
தங்களுடன் வணிகம் செய்யும் நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கும் வரிக்கு நிகராக, தாங்களும் வரி விதிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, பல்வேறு நாடுகளுக்கான வரி விகிதங்களையும் அறிவித்துள்ளார். இதனால், எதிர்தரப்பு நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா பங்குச் சந்தையும் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக போரே வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால், இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பெரும் லாபம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக சர்வதேச காலணி உற்பத்தி சந்தையின் மையமாகவும் தமிழ்நாடு உருவெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்காவால் வந்த லாபம்:
அமெரிக்காவின் வரி அறிவிப்பை தொடர்ந்து, இந்தியா மீது கூடுதலாக 26 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உற்பத்தி துறையில் இந்தியாவின் போட்டி நாடுகளாக உள்ள வியட்நாம் மீது கூடுதலாக 46 சதவிகிதமும், கம்போடியா மீது கூடுதலாக 49 சதவிகிதமும், வங்கதேசம் மீது கூடுதலாக 37 சதவிகிதமும் மற்றும் இந்தோனேசியா மீது 32 சதவிகிதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்புகளால் மேற்குறிப்பிடப்பட்ட நாடுகளில் இருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை கடுமையாக உயரும். அது இந்தியாவிற்கு சாதகமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக Nike, Adidas மற்றும் Puma போன்ற முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலையை இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மாற்ற முனைப்பு காட்டி வருகின்றன.
இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்:
சர்வதேச காலணி உற்பத்தி நிறுவனங்களின் மையமாக வியட்நாம் உள்ளது. அதன்படி, Nike நிறுவனத்தின் 50 சதவிகித உற்பத்தியும், Adidas நிறுவனத்தின் 39 சதவிகித உற்பத்தியும் வியட்நாமில் தான் நடைபெறுகிறது. இந்நிலையில் தான், புதிய வரி விதிப்பால் வியட்நாமிய தோல் அல்லாத காலணி மீதான வரிகள் சில வகைகளில் 60% வரை உயரும். இது இந்தியாவின் திருத்தப்பட்ட விகிதமான சுமார் 36% உடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பல முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை, இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மாற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளன. சீனாவில் கடும் நிபந்தனைகளால் ஏற்கனவே பல உற்பத்தி நிறுவனங்கள் அங்கிருந்து இந்தியாவிற்கு மாறத் தொடங்கியுள்ளன. புதிய வரி விதிப்புகள் இந்தப் போக்கை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காலணி உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு:
பல்வேறு முதலீடுகள் காரணமாக உலகளாவிய காலணி உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. நாட்டின் காலணி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 38 சதவீதம் குறிப்பாக தோல்களில் இருந்து உருவாக்கப்படும் காலணிகள் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 47 சதவீதம். உலக அளவில் தற்போது 86 சதவீத காலணிகள் தோல் அல்லாத மற்ற பொருட்களில் இருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் இதுபோன்ற காலணிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
புதிய நிறுவனங்களின் ஆலைகள்:
அதில் தைவானிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபெங் டே, ஷூ டவுன், பௌ சென் கார்ப் மற்றும் ஹாங் ஃபூ ஆகியவை மாநிலத்தில் ரூ.18,000 கோடிக்கு மேல் முதலீடு செய்கின்றன. KICL மற்றும் ஷூ டவுன் குழுமத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியான பெரம்பலூரில் உள்ள JR One கோத்தாரியின் தொழிற்சாலை , நவம்பரில் தொடங்கப்பட்டதிலிருந்து 2 மில்லியனுக்கும் அதிகமான காலணிகளை உற்பத்தி செய்துள்ளது. அடிடாஸ் காலணிகளை தயாரிப்பதில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய KICL தமிழ்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ரூ.20,000 கோடி முதலீடு, 1.15 லட்சம் வேலைவாய்ப்புகள்:
மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் அனைத்துமே Nike, Adidas மற்றும் Puma போன்ற முன்னணி காலணி பிராண்டுகளுக்கான காலணிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மொத்தமாக 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளன. அதன்படி, பெரம்பலூர், அரியலூர், திண்டிவனம், பர்கூர், கரூர்
மற்றும் ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆலைகள் அமைந்துள்ளன. ஏற்கனவே காலணி உற்பத்தியில் தமிழ்நாடு 32 சதவிகிதம் பங்களித்து வருகின்றன. புதிய ஆலைகளால் அந்த பங்களிப்பு மேலும் அதிகரிக்க உள்ளது. நடப்பாண்டு இறுதிக்குள், தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைகள் சுமார் 20 தமிழ்நாட்டில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
அதன்படி, ஹாங் ஃபூ நிறுவனம் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள் பௌ சென் நிறுவனம் மூலம் 20,000 வேலைவாய்ப்புகள், ஃப்ரீட்ரெண்ட் நிறுவனங்கள் மூலம் 15,000 வேலைவாய்ப்புகள், ஜேஆர் ஒன் மூலம் 40 முதல் 50,000 வேலைவாய்ப்புகள் மற்றும் ஃபெங் டே நிறுவனம் மூலம் 10,000 வேலைவாய்ப்புகள் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படுகின்றன.
செலவு நன்மைகள்:
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிலாளர்களுகான செலவும் குறைவாகும். இது முதலீட்டாளர்களை வெகுவாக கவர்கிறது. சாதகமான கட்டணங்கள், போட்டித்தன்மை வாய்ந்த தொழிலாளர் செலவுகள் மற்றும் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன், தமிழ்நாடு உலகளாவிய காலணி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.
-
இந்தியா: $0.90/மணிநேரம்
-
சீனா: $3/மணிநேரம்
-
வியட்நாம்: $2/மணிநேரம்
-
இந்தோனேசியா: $1.50/மணிநேரம்
காலணி உற்பத்தி பூங்காக்கள்:
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தங்களது காலணி உற்பத்தியை அதிகரிக்க பல முன்னணி நிறுவனங்கள் தீவிரம்காட்டி வருகின்றன. இது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், 1 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற அரசின் இலக்கை அடைவதற்கும் உதவும் என கருதப்படுகிறது. அண்மையில் கூட மாநில அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தோல் இல்லாத காலணி உற்பத்தி பூங்காக்கள் நிறுவப்படும் என்றும் இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.