தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. குறிப்பாக வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 4 ஆம் தேதி புயுலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழை:
இந்நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் ஒரே நாளில் சென்னையில் பல இடங்களில் 100 மில்லிமீட்டர் கடந்து மழை பதிவானது ஒரே நாளில் அதிகளவு மழை பதிவானதால் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெருவாரியான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், வரதராஜபுரம், தேனாம்பேட்டை, பெரம்பூ, கொளத்தூர், கொரட்டூர், செங்குன்றம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் மழை நீர் புகுந்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் முட்டி அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் எங்கு பள்ளம் மேடு இருக்கிறது என தெரியாததால் தட்டு தடுமாறி வாகனத்தை இயக்கி வருகின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அகற்றும் பணிகள் தீவிரம்:
தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணியில் மாநகராட்சி தரப்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “பல்வேறு இடங்களில் மழை அதிகமாக பதிவாகி இருந்தது, இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை இருந்தாலும் கூட மேற்கு மாம்பழம் தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை தற்பொழுது படிப்படியாக அகற்றி வருகிறோம் என்றார். மேலும், மழைநீர் வடிகால் பணி நடைபெற்றதால் தான் மற்ற இடங்களில் மழைநீர் தேங்காாமல் இருந்ததாக” தெரிவித்தார்.
மேலும், “ நிலவரத்தை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியாற்றி வருகின்றனர். தண்ணீர் வேகமாக வடிகிறது. 16,000 பணியாளர்கள், 491 மோட்டார்கள், கூடுதலாக 150 டிராக்டர்கள் போர்னர் மோட்ரோக்களும் களத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்க எங்களிடம் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.