தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் சிறப்பான நாளாக அமையும். அதன் அடிப்படையில், மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் கூடிய நாள் மஹாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களிலும் இந்த மஹாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வந்தாலும், இந்து அறநிலைத்துறை சார்பில் மார்ச் 1 ம் தேதி இரவு கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


மேலும், சிவராத்திரியை முன்னிட்டு, சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையில் அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது.



இந்த நிகழ்ச்சியில், ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை  நடைபெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கப்பட இருக்கின்றனர். அந்த விற்பனையகத்தில் பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.


இந்தநிலையில், அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில்  அமைச்சரின் பணி பூஜை புனஷ்காரங்கள் செய்வதல்ல என்று திராவிட கழக தலைவர் வீரமணி அறிக்கை மூலம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 


இந்து அறநிலையத் துறை வரலாற்றில் முதல் முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கு மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் சிவராத்திரி விழாவில் 40 ஆயிரம் பேர் பங்கேற்பர். எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகாசிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்" என்று விரிவாக செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் விளக்கியிருக்கிறார்.


இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர் என்பது செய்தி. இந்து அறநிலையத் துறை, அதன் அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்களின் பணி என்பது பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவதோ, செயல்படுவதோ அல்ல.


கோவில் சொத்து, வரவு - செலவுகளைக் கண்காணிப்பதும், சரி பார்ப்பதும், நிர்வகிப்பதும் மட்டும் தான். நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள், அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறையும் அவர் பொறுப்பில் இருந்தது. சிதம்பரம் நடராஜன் கோவிலுக்கு நாவலர் சென்ற போது, தீட்சதர்கள் அவருக்கு அளித்த பிரசாதத்தை இந்தக் கையில் வாங்கி, அந்தக் கைவழியாக விலக்கிவிட்டார்.


அப்பொழுது ஆன்மிகவாதிகள் பெரிய அளவில் பிரச்சினையாக்கியபொழுது, "இந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி என்பது - ஆறு மரக்கால் அரிசி என்றால், அதைச் சரியாக அளந்து போடுகிறார்களா என்று கண்காணிப்பதே தவிர, பூஜை புனஷ்காரங்களில் ஈடுபடுவது இல்லை" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் - அமைச்சர் நாவலர்,


தந்தை பெரியார் "பலே, பலே நெடுஞ்செழியன்" என்று பாராட்டி அறிக்கை வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்துகிறோம். ('விடுதலை', 16,4,1967).


இந்து அறநிலையத் துறை அதற்குரிய பணிகளை மட்டும் செய்யட்டும் என்பதே நமது வேண்டுகோள்! பார்ப்பனர்களைத் திருப்தி செய்வது என்பதற்காக விதிகளை மீறி பகுத்தறிவாளர்கள், மதச் சார்பற்ற வர்களது மனதில் புண்ணை ஏற்படுத்தலாமா?


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர், இதில் முரணாக ஈடுபடலாமா?.என்று அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண