அட ஆமாங்க நான் பிராமணரே இல்லை. சிறுத்தை வீட்டு மருமகள் என்பதில் தான் எனக்குப் பெருமைன்னு பளிச்சென்று பேசியுள்ளார் மருத்துவர் ஷர்மிளா.
அண்மையில் திருப்போரூர் எம்.எல்.ஏ. பாலாஜியின் மனைவியும் மருத்துவருமான ஷர்மிளா மீது சமூக வலைதளங்களில் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் அவரை சிலர், அக்ரஹாரத்தின் அவமானச் சின்னம் என்றும் சிறுத்தையின் மருமகள் என்றும் கூறியிருந்தனர்.
இதனையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
சமூகத்தில் எப்போது ஒரு பெண் கருத்து சொன்னாலும் அது விமர்சனப் பொருளாகிவிடுகிறது. ஒரு பெண்ணின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாத சமூகம் அவளை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அந்தப் பெண்ணை அவமானப்படுத்தி, அவளின் நடத்தையை விமர்சித்து அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அப்படித்தான் என்னையும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அயல்நாட்டில் இருக்கும் நபர் ஒருவர் என்னை அக்ரஹாரத்தின் அவமானச் சின்னம் எனக் கூறியதோடு விடுதலை சிறுத்தையின் மருமகள் என்றும் கூறியிருந்தார்.
அதற்கு நானும் பதில் சொன்னேன். மனு ஸ்மிருதி எனும் மண்ணாங்கட்டி ஆளும் அக்ரஹாரத்தில் இருப்பதைவிட ஒடுக்கப்பட்டாலும் தன்மானத்துக்காக திமிறி எழும் சிறுத்தையாக, சிறுத்தையின் மருமகளாக இருப்பதில் பெருமை என்று பதில் கூறியிருக்கிறேன்.
நான் பிறப்பால் பிராமணர் என்றாலும் என்றும் அதை பெருமித அடையாளமாக நினைத்ததில்லை. எனக்கு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கையில் நம்பிக்கை இருக்கிறது. நான் அம்பேத்கரை உள்வாங்கியவள். இது என்னை சமூக வலைதளங்களில் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். நான் எல்லோரும் சமம் என்று நினைக்கிறேன். எனது அடையாளம் எனது நடத்தையால், எனது சமூக சேவையால் வெளிப்பட வேண்டுமே தவிர நான் பிறந்த சாதியால் அல்ல.
மனு ஸ்மிருதியின் ஒவ்வொரு ஸ்லோகமும் பெண்ணை ஒடுக்குவதாக இழிவு படுத்துவதாக இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனாலேயே நான் அந்த மனு ஸ்மிருதியை பின்பற்றும் பிராமணராக இருக்க விரும்பவில்லை. எனக்கு எழுச்சித் தமிழரின் பேச்சு உத்வேகம் அளிக்கிறது. இத்தனைக்கும் விசிகவில் உறுப்பினராக இல்லை. எனது கருத்துகளை விசிக கருத்துகளாகக் கூறியதில்லை. சுயமரியாதையை, சமத்துவத்தை போதனையுட நிப்பாட்டாமல் அதன்படி நடந்து காட்டுகிறார் எழுச்சித் தமிழர் திருமாவளவன். அந்தக் கொள்கையால் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.
பிராமணராக இருப்பதில் எந்த தனிப்பட்ட கவுரவமும், பெருமிதம் இல்லை என நான் நினைக்கிறேன். இதை நான் மனதால் உணர்ந்திருக்கிறேன். நான் பிராமணரே இல்லை. சிறுத்தை வீட்டு மருமகள் என்பதில் தான் எனக்குப் பெருமை.
இவ்வாறு அந்தப் பேட்டியில் டாக்டர் ஷர்மிளா கூறியுள்ளார்.
ஏற்கெனவே பிராமணத்திற்கு எதிராக அவர் பல கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஒருமுறை அவர் தனது ட்விட்டரில், "பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே...நீங்களே இப்படி பேசலாமா??! பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா.பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது.ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும்.மனிதமும்,சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல" எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.