கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது "ஸ்டாலின் ஆட்சி நன்றாக நடக்கிறது" எனப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

சுயநலத்தில் ராமதாஸ்?

திமுக கூட்டணியில் தனது மகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் பெறும் நோக்கத்தில் அவர் இவ்வாறு பேசத் தொடங்கியிருப்பதாகப் பாமக வட்டாரத்தில் பேசப்படுகிறது. பாமகவில் தந்தை ராமதாஸும், மகன் அன்புமணியும் தனித்தனி நிலைப்பாடுகளை எடுத்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராமதாஸ், எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்துத் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியான நிலையில், திமுகவுடன் கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் காய் நகர்த்தி வருவதாகத் தெரிகிறது. இதற்காகத் தனது ஆதரவு எம்.எல்.ஏ. ஜி.கே.மணி வாயிலாக ஆளும் தரப்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

விருப்ப மனு தாக்கல் தொடக்கம்:

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் நேற்றுமுன்தினம் பாமக சார்பில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியை மருத்துவர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். அப்போது ஜி.கே.மணி மற்றும் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Continues below advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ்:

"வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 12-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம். கடந்த 2006-ல் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். எடப்பாடி பழனிசாமி எதற்காக அன்புமணியை அழைத்து கூட்டணி அமைத்தார் என்பது தெரியவில்லை. பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தவெக-வுடன் தொகுதி பங்கீடு குறித்துப் பேசப்படுவதெல்லாம் கற்பனையான தகவல். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். வரும் தேர்தலில் ஜி.கே.மணியும், ஸ்ரீகாந்தியும் போட்டியிடுவர். பாமகவில் இரு அணிகள் கிடையாது; என் தலைமையில் ஒரே அணிதான் உள்ளது," என்றார்.

பழம் நழுவி பாலில் விழுமா?

திருமாவளவன் உள்ள கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்; எதிர்பாராதது கூட நடக்கும்" என்று பதிலளித்தார். தொடர்ந்து, கருணாநிதியின் பாணியில் 'பழம் நழுவி பாலில் விழுவது போல்' நடக்குமா எனக் கேட்டதற்கு, "ஏன் வாய்ப்பில்லை? பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது என்றே நினைத்துக் கொள்ளுங்கள்" எனச் சிரித்தபடி பதிலளித்தார்.

மேலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளதாக ராமதாஸ் அழுத்தம் திருத்தமாக கூறினார். தி.மு.க., அரசு, 2021 மே 7ம் தேதி பொறுப்பேற்றது முதல், முதல்வர் ஸ்டாலின் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து, 2,000க்கும் அதிகமான அறிக்கைகளை வெளியிட்ட ஒரே தலைவர் ராமதாஸ் தான். அதிலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் ராமதாஸ்.

தற்போது பாமக தலைவர் அன்புமணி அ.தி.மு.க கூட்டணியில் சேர்த்துக் கொண்ட கோபத்தில் இருக்கும் மருத்துவர் ராமதாஸ், அதற்கு எதிரான திமுக கூட்டணியில் தனக்கு இடம் தேடுகிறார். அதன் வாயிலாக, அன்புமணியை எதிர்த்து தீவிர பிரச்சாரம் செய்ய முடியும் என்பதோடு, மகள் ஸ்ரீ காந்திக்கு 'சீட்' பெறவும் திட்டமிட்டுள்ளார். இதனால் மருத்துவர் ராமதாஸ் சுயநல அரசியலில் இறங்கிவிட்டார் என கடுமையான விமர்சனங்களை பாமகவினர் வெளிப்படையாக பதிவு செய்து வருகின்றனர்.