புதுச்சேரியில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2025 முதல் 2030 வரை) ஆண்டுதோறும் உயர்த்தும் வகையில் புதிய 'சிலாப்' (பிரிவுகள்) உருவாக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மின்கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு (2025 முதல் 2030 வரை) ஆண்டுதோறும் உயர்த்தும் வகையில் புதிய 'சிலாப்' (பிரிவுகள்) உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 300 யூனிட்களுக்கு மேல் ஒரே கட்டணம் இருந்த நடைமுறையை மாற்றி, கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய 'சிலாப்' மற்றும் கட்டண உயர்வு விவரங்கள்

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை மத்திய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (Joint Electricity Regulatory Commission - JERC) நிர்ணயிக்கிறது. இதற்காக, புதுவை மின்துறை வருவாய் மற்றும் செலவினங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, மின்கட்டணத்தை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Continues below advertisement

நடப்பு ஆண்டு (1.10.2025 முதல் முன்தேதியிட்டு) வீட்டு உபயோக மின் கட்டண விவரம்:

யூனிட் அளவு கட்டணம் 

  • முதல் 100 யூனிட் ரூ. 2.90
  • 101 முதல் 200 யூனிட் ரூ. 4.20
  • 201 முதல் 300 யூனிட் ரூ. 6.20
  • 301 முதல் 400 யூனிட் (புதியது) ரூ. 7.70
  • 400 யூனிட்க்கு மேல் (புதியது) ரூ. 7.90

குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிதாக 301 முதல் 400 யூனிட் மற்றும் 400-க்கு மேல் என இரண்டு புதிய சிலாப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனர்ஜி கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ. 2.30 வீதம் வசூலிக்கப்பட உள்ளது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் கட்டண உயர்வு

அடுத்த ஆண்டு (2026-27) இதே கட்டணம் வீட்டு உபயோகத்துக்குத் தொடர்கிறது. ஆனால், அதைத் தொடரும் ஆண்டுகளில் கட்டணம் உயரும்படி அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

2027-28: முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் 20 பைசா உயர்ந்து ரூ. 3.10 ஆகிறது. பிற சிலாப்புகளுக்கு உயர்வு இல்லை.

2028-29: முதல் 100 யூனிட்டுக்கு ரூ. 3.45, 101 முதல் 200 வரை ரூ. 4.30, 201 முதல் 300 வரை ரூ. 6.40, 301 முதல் 400 வரை ரூ. 7.95, 400-க்கு மேல் ரூ. 8.15 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2029-30: முதல் 100 யூனிட்டுக்கு ரூ. 3.85, 101 முதல் 200 வரை ரூ. 4.40, 201 முதல் 300 வரை ரூ. 6.50, 301 முதல் 400 வரை ரூ. 8.05, 400-க்கு மேல் ரூ. 8.25 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, எனர்ஜி கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு தற்போதுள்ள ரூ. 2.30ல் இருந்து ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு, 2029-30 நிதியாண்டில் ரூ. 3.75 ஆகிறது. மற்ற பிரிவுகளுக்கும் (வணிகம், தொழிற்சாலைகள், பொது சேவை) ஆண்டுவாரியாக கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் மானியம் வழங்குமா?

கடந்த ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தையும் அரசே மானியமாக ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டண உயர்வுக்கும் புதுச்சேரி அரசு மானியம் வழங்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும். அரசின் இந்த தொடர்ச்சியான கட்டண உயர்வு அறிவிப்பு புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.