செங்கல்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை, திடீர் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்-ரே உள்ளிட்ட சோதனைகள் மூலம் குழந்தையின் வலது நுரையீரலின் கீழ் பகுதியில் உலோகத் திருகாணி (Metal Screw) சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். குழந்தையின் உயிரைக் காக்க அந்தத் திருகாணியை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.
இரண்டு மணி நேரப் போராட்டம்
சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, 'Flexible Bronchoscopy' மற்றும் 'Forceps' கருவிகளின் உதவியுடன், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த திருகாணியை மருத்துவர்கள் மிகத் துல்லியமாக அகற்றினர். இந்தச் சிக்கலான சிகிச்சையை மருத்துவர்கள் சரத் பாலாஜி, அருணகிரிநாதன், திலிப் குமார் மற்றும் அவர்களது குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். சிகிச்சையின் போது குழந்தையின் சுவாசப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உடல்நிலையைச் சீராக வைத்திருப்பதிலும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் பத்மநாபன் மற்றும் அஷ்வின் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். தற்போது அந்த குழந்தை நலமுடன் தேறி வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு
குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் S.A. ரவிக்குமார் இதுகுறித்துப் பேசுகையில், இத்தகைய அவசர நிலைகளை எதிர்கொள்ளும் உயர்தர சிகிச்சை வசதிகள் தங்கள் மருத்துவமனையில் இருப்பதை இந்தச் சாதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். இந்தச் சிறப்பான குழுப் பணியைப் பாராட்டிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் பொதுமக்கள் இம்மருத்துவமனையின் நவீன வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நவீன சிகிச்சை வசதிகள்
சுமார் 1700 படுக்கைகளுடன் நாளொன்றுக்கு 5000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனை, தற்போது அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் ஒரு முக்கிய உயர் சிகிச்சை மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (NICU), தீவிர சிகிச்சைப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CRRT கருவி மற்றும் நாளொன்றுக்கு 75 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி எனப் பல சேவைகள் இங்கு சிறப்பாக வழங்கப்படுகின்றன.
உயர்தர மருத்துவச் சேவைகள்
மேலும், நவீன 'Cath Lab' மூலம் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சைகள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவில் செய்யப்படும் சிக்கலான கை மறுசீரமைப்பு சிகிச்சைகள் மற்றும் சிறுநீரகக் கற்களை லேசர் மூலம் அகற்றும் நவீன வசதிகள் இங்கு உள்ளன. காது கேளாத குழந்தைகளுக்கான காக்லியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபிக் எலும்பு சிகிச்சை, 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் போன்ற மேம்பட்ட பரிசோதனை வசதிகளும் அரசுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மாவட்டத்தின் முதன்மையான மருத்துவ மையமாக விளங்கும் இம்மருத்துவமனை, பல்வேறு உயர் சிகிச்சைத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் பொதுமக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
