*முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக தன்னையும், தனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என ராஜேந்திர பாலாஜியின் சகோதரி தொடர்ந்த வழக்கில் எங்கு பட்டியலிடுவது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி பார்வைக்கு கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்தார்ந்தார். அதில், "முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரி நான். எனது மகன்கள் வசந்தகுமார், ரமணா மற்றும் ஓட்டுநர் ராஜ்குமார் ஆகியோர் கடந்த 17 ஆம் தேதி அன்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மூவரிடமும் காவல்துறையினர் கையெழுத்து பெற்றுள்ளனர். எனவே முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினர் என்பதற்காக என்னையும் ,எனது மகன்கள் மற்றும் ஓட்டுனரையும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார் .இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை தேவைப்பட்டால் அவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பி விசாரணை செய்து கொள்ளலாம் என கூறியிருந்தார்.
இன்று இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், "இந்த வழக்கை எம்.எல்.ஏ., எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்" என கூறப்பட்டது.அதற்கு நீதிபதி மனுத்தாக்கல் செய்தவர்கள் எம்.எல்.ஏ., எம்.பிக்களோ, அல்லது முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பிக்களோ அல்ல. அவ்வாறு இருக்கையில் ஏன் இந்த வழக்கை அங்கு ஏன் மாற்ற வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.அதற்கு அரசு தரப்பில், "மனுத்தாக்கல் செய்திருப்பவர்களுக்கும், முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை இந்த மாற்ற வேண்டும் என கூறப்பட்டது.
அதற்கு நீதிபதி கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் மீது குற்றம் உள்ளதா என்ற கேள்விக்கு அரசுத் தரப்பில் இல்லை என்றுதான் பதில் அளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.அதற்கு அரசு தரப்பில் தற்போது விசாரணை நடைபெற்று வரும் சூழலில் இந்த வழக்கறிக்கும், மனுதாரர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்" என கோரப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், "நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் ஓட்டுனரின் மனைவியை விசாரணைக்காக மாலை 5 மணிக்கு அழைத்துச் சென்று இரவு 9 மணிக்கு விடுவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞரின் ஓட்டுனரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது வரை அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை" என குறிப்பிடப்பட்டது.இதையடுத்து நீதிபதி இந்த வழக்கை எங்கு பட்டியலிடுவது என்பது தொடர்பாக தலைமை நீதிபதி பார்வைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தை நாடி வருபவர்களுக்கு விரைவான நியாமான நீதி கிடைக்க வேண்டும் - தலைமை நீதிபதி பேச்சு
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று வழக்குகளை விசாரிக்கிறார். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்று பேசினர்.
இதை தொடர்ந்து, பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, "மதுரை மிகப்பழமையான நகரம். கலை, கலச்சாரம், பாரம்பரியத்தின் தலைநகராக உள்ளது. கிழக்கு ஏதென்ஸ் என அழைக்கப்படுகிறது. சமண தொல்லியல் சின்னங்கள் மதுரையில் அதிகமாக உள்ளன. ஒருவர் பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி வரும் போது, அவருக்கு விரைவான நியயமான நீதி கிடைக்க வேண்டும். அதை நோக்கித்தான் நீதிமன்ற பணிகள் இருக்க வேண்டும். வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கு நீதிமன்ற பதிவாளர், வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தி வழக்குகளை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டார்.