சேலத்தில் நடந்து வரும் திமுக இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற வேண்டும் என தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அகில இந்திய அளவிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ” வேற்றுமையில் ஒற்றுமை எனும் சிறப்பான தன்மையைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைப்போரும், தனித்துவமிக்க பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட இந்திய மாநிலங்களின் மொழி - இன பண்பாட்டு அடையாளங்களை ஒடுக்க நினைப்போரும் அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்குமுறையை மேற்கொண்டு வரும் இன்றைய சூழலில், தி.மு.கழகத்தின் இளைஞரணி நடத்துகின்ற 'மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடு' இந்திய ஒன்றியத்தின் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள கோடானுகோடி இளைஞர்களுக்கும் ஊக்கமளிக்கக் கூடியதாகும்.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகின்ற இன்றைய இருண்ட நிலை மாறி, உதயக் கதிர்கள் நாடு முழுவதும் ஒளிவீசிட, வெற்றி முரசம் கொட்டுகின்ற வகையில் கழக இளைஞரணிச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்தி மகிழ்கிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகத் தீவிரமாக நாம் களம்மாட வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞர்களே இந்திய திருநாட்டின் எதிர்காலம் தற்போது உங்கள் கையில். கொள்கை குன்றுகள் நீங்கள் களை நிறைந்த கழனியில் பயிர் தழைத்து வளராது. கண்மூடி பழக்கமுள்ள சமுதாயம் செழித்து வாழாது ! என்பது முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கூற்று. அதிகாரக் குவியல்களை அப்புறப்படுத்த கரம் கோர்ப்போம்
திமுக இளைஞரணி மாநாடு இந்த வெளிச்சத்தை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எடுத்துச் செல்ல உதவும். காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு திமுக இளைஞரணி நடத்தும் மாநில உரிமை மீட்பு மாநாடு மகத்தான வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கே. பாலகிருஷ்ணன் தனது வாழ்த்துரையில், “ இம்மாநாடு 'மாநில உரிமை மீட்பு ' முழக்கத்தோடு சுதந்திரம், ஜனநாயகம், சமூக நீதி, பாலின சமத்துவம் ஆகிய கோரிக்கைகளை நிலைநிறுத்துவதற்கும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும் இந்தியாவின் முன் மிகப்பெரும் ஆபத்தாக எழுந்திருக்கிற பாசிச சக்திகளை வீழ்த்துவதற்குமான தீர்மானங்களை நிறைவேற்றும் என நம்புகிறேன்.இதற்கான போராட்டத்தில் நாடு முழுவதும் இருக்கிற இளைஞர்களை பல்வேறு இளைஞர் அமைப்புகளையும் ஒன்றுபடுத்திகளம் காணும் என நம்புகிறேன்.
அந்த வகையில் இந்த மாநாடு வெற்றிபெற மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு சிபிஐ(எம்) சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிர்ஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தனது வாழ்த்துரையில், “ தமிழகத்தின் உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்களின் தனித்தன்மை, பண்பாடு ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நீட் தேர்வு திணிப்பு காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை ரத்து செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் இளைஞர் அணியை திரட்டி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்திய உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார பாராட்டுகிறேன். தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கிற இளைஞர் அணி நடத்துகிற மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மதிமுக தலைவர் வை.கோ தனது வாழ்த்துரையில், “திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பதால் சனாதன சக்திகளின் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார்.
நூற்றாண்டு கடந்திருக்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வெற்றிக்கு திமுக இளைஞரணி அடித்தளமாக திகழ வேண்டும்; அதற்கு சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாடு இலட்சியப்பாதை அமைக்கட்டும்; வெற்றி சரித்திரம் படைக்கட்டும்; என வாழ்த்துகிறேன்” என வாழ்த்தியுள்ளார்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் தனது இம்மாநாடு வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறுவதை உறுதி செய்து, கட்டியம் கூறும் மாநாடாக அமையும் என்பது உறுதி.
இளைஞர் அணியின் செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும் இம்மாநாடு முழு வெற்றி பெற, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கின்றோம்” என வாழ்த்தியுள்ளார்.
இவர்கள் மட்டும் இல்லாமல், சோனியா காந்தி, சீத்தாரம் யெச்சூரி, பினராயி விஜயன், டி.கே.சிவக்குமார், சித்தராமையா, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.